×

நீலகிரியில் போக்குகாட்டும் கோடை மழை மலை காய்கறி விவசாயம் பாதிப்பு

*விவசாயிகள், தொழிலாளர்கள் கவலை

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் கோடை மழை ஏமாற்றி வரும் நிலையில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளதால் தண்ணீர் பற்றாகுறை நிலவுகிறது. இதனால் மலை காய்கறி விவசாய பணிகள் பாதிப்படைந்துள்ளது. தமிழகத்தின் நீலகிரி ஒரு பிரதான தோட்டக்கலை மாவட்டமாகும். நீலகிரி மாவட்டத்தில் நிலவக்கூடிய தட்ப வெட்பநிலை பல்வேறு பயிர்கள் சாகுபடிக்கு உகந்ததாக உள்ளது. தேயிலை, காய்கறிகள், பழங்கள், நறுமண பயிர்கள், மலர்கள், மருத்துவ பயிர்கள் மற்றும் மலைத் தோட்டப்பயிர்கள் ஆகியவை படிமட்டங்கள் மற்றும் சில கிராமங்களில் குறுகிய சரிவான பரப்பில் சாகுபடி செய்யப்படுகின்றன.

ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா பகுதிகளில் தேயிலை, உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், கேரட், பீன்ஸ், பிளம், பீச், பேரி, ஆரஞ்சு, காப்பி சாகுபடி செய்யப்படுகிறது. கூடலூர், பந்தலூர் போன்ற பகுதிகளில் கிராம்பு, ஜாதிக்காய், மிளகு, இஞ்சி மற்றும் பழங்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. தோட்டக்கலை பயிரான மலை காய்கறிகள் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டிற்கு நீர்போகம், கார்போகம் மற்றும் கடை போகம் என மூன்று பருவங்களாக சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் 55 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை விவசாயம் ேமற்கொள்ளப்படுகிறது.

இதற்கு அடுத்தப்படியாக மலை காய்கறி பயிர்கள் 7 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் பயிரிப்படுகிறது. நீலகிரி மக்களின் பொருளாதாரத்தை நிர்ணயிக்க கூடிய தொழிலாக இவை உள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் வரை பெய்த மழை காரணமாக பல ஏக்கர் பரப்பளவில் காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்பட்டது. அவை அறுவடை செய்யப்பட்டு இம்மாத துவக்கம் வரை விற்பனைக்கு அனுப்பப்பட்டது.

இந்த சூழலில் நடப்பு ஆண்டு கோடை மழை பொழிவை நம்பி விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களை தயார் செய்து காத்திருந்தனர். ஆனால் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் குடிநீர் ஆதாரங்கள் மட்டுமின்றி, விவசாய நிலங்களில் உள்ள நீர் நிலைகளிலும் தண்ணீரின்றி வறண்டுள்ளது. சில இடங்களில் பயிரிடப்பட்டுள்ள காய்கறிகளுக்கு ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. இம்மாத துவக்கத்தில் ஒரிரு நாட்கள் லேசான மழை பொழிவு இருந்த நிலையில் அதுபோதுமானதாக இல்லை.

குறிப்பாக ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் ஒரு துளி கூட பெய்யாமல் ஏமாற்றியது. கோடை மழையை நம்பி கார்போக விவசாயத்திற்காக ஊட்டி சுற்று வட்டார பகுதிகளான முத்தோரை பாலாடா, கேத்தி பாலாடா, கடநாடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்ள விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இதனால் விவசாய நிலங்கள் வானம் பார்த்த பூமியாக காட்சியளிக்கின்றன. காய்கறி உற்பத்தி குறைந்துள்ளதால் அதனை நம்பி பிழைப்பு நடத்தும் கூலி தொழிலாளர்களும், காய்கறிகளை பிற நகரங்களுக்கு அனுப்பும் நபர்களும் பாதிப்படைந்துள்ளனர். இதேபோல் கடந்த 3 மாதங்களாக மழை பெய்யாத சூழலில் பகல் நேரங்களில் கொளுத்தும் வரலாறு காணாத வெயிலால் தேயிலைசெடிகள் காய்ந்துள்ளன. பல பகுதிகளிலும் சிவப்பு சிலந்தி நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

மழை பெய்தால் மட்டுமே ஒரளவிற்கு தேயிலை செடிகளை பாதுகாக்க முடியும் என்ற சூழல் நிலவி வருகிறது. இனிவரும் நாட்கள் கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்பதால் இம்முறை பருவமழை காலம் வரை பசுந்தேயிலை உற்பத்தி 20 முதல் 30 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக தேயிலை வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் நீலகிரி மாவட்ட விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

The post நீலகிரியில் போக்குகாட்டும் கோடை மழை மலை காய்கறி விவசாயம் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Tamil Nadu ,
× RELATED நீலகிரியில் நிலச்சரிவுகளை தடுக்க...